அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

6.9.14

ஓணம் பண்டிகைக்கும் அகமுடையாருக்கும் உள்ள தொடர்பு!


தமிழகத்தின் மிகப் பழமையான போர்க்குடிகளில் அகமுடையார்களும் அடங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறத்தன்மை என்பது மிகவும் உயர்வான ஒன்றாக வரலாற்றில் போற்றப்பட்டுள்ளது. இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் அசுர குல வேந்தன் மகாபலி ஆவான். சோபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு மகாபலி மன்னன் ஆண்டதாகக் கருதப்படுகிறான். தக்காண பீடபூமி பகுதியில் இவ்வூர் இருந்ததாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும், வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இன்றும் கேரளத்தில் தங்கள் குல முதல்வனாகிய மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை 'வாமன ஜெயந்தி' என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டிலும் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 15-16ஆம் நூற்றாண்டு வரை வெவ்வேறு பகுதிகளில் 'மகாபலி வாணாதிராயர்கள்' என்ற சிற்றரச வம்சத்தவர் ஆண்டுள்ளனர். இவர்கள் தம்மை வெட்டுமாவலி அகம்படியர் என்று கூறிக்கொண்டுள்ளனர் (ஆதாரம்: கணக்கன் கூட்டத்தார் பட்டயம், பக்கம் 233-243, கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள், பதிப்பாசிரியர்: செ. இராசு, தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1991). இந்திய வரலாற்றில் மகாபலி சக்கரவர்த்தி மறைக்கமுடியாத ஒரு வரலாற்றுப் பாத்திரமாவார். பாரத நாடு என்ற பெயரையே 'மகாபலி தேசம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகூட ஒரு காலகட்டத்தில் எழுந்ததுண்டு. மகாபலியிடமிருந்து, வாமன அவதாரமெடுத்து விஷ்ணு நாட்டைப் பற்றிக் கொண்டார் என்ற கதையின் பின்னணி சுவையானது. மகாபலி 99 அஸ்வமேத யாகங்கள் செய்து முடித்து விட்டான். 100ஆவது அஸ்வமேதம் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியை அடைந்து விடுவான். எனவே, மகாபலியின் இந்த முயற்சிக்கு இடையூறு விளைவிக்கத் திட்டமிட்ட இந்திரன் விஷ்ணுவைத் தூண்டிவிட்டு நினைத்ததைச் சாதித்துக் கொண்டான் என்பதே புராணம். இந்திர பதவியை மயிரிழையில் தப்ப விட்டுவிட்டாலும்கூட மகாபலி வம்சத்தவர்கள் பலீந்திரன் வம்சத்தவர்கள் என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் (அயோத்தியை ஆண்ட ராமன் வம்சத்தவரும், குருக்ஷத்திரத்தை ஆண்ட பாண்டவ கெளரவ வம்சத்தவர் உள்ளிட்ட மன்னர்களும்) சூரிய, சந்திர குலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டைப் பொருத்தவரை சோழர்கள் சூரிய குலத்தவர்கள். பாண்டியர்கள் சந்திர குலத்தவர்கள். சேரர்களும் சந்திர குலத்தின் கிளைக் குலத்தவரே. சேரர்களில் உதியன் சேரலாதன் மகாபாரதப் போரில் இறந்த சந்திர குல வீரர்களைத் தனது முன்னோராகக் கருதினான் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். இவர்களைத் தவிர வரலாற்றில் பரமார மன்னர்கள் போன்றவர்களும், செளகான் போன்ற ராஜபுத்திர குலத்தைச் சேர்ந்தவர்களும் அக்கினி குல க்ஷத்திரியர்களாகத் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளகவும் வாமணன் அவதரித்ததும் அன்று தான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைகாஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

- மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”

- பெரியாழ்வார் திருமொழி 6

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2

இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள்மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்தப் பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காகத் தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

தமிழ்க் கல்வெட்டுகளில் வர்ம சிகிச்சை முறை, ‘அங்க வைத்தியம்' அல்லது ‘அங்க வைஜ்யம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய நடைமுறைப்படி அங்க வைத்யக் கல்வியும் பயிற்சியும் அரச குலத்தார்க்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே உரியவையாகப் பராமரிக்கப்பட்டு இரகசியம் காக்கப்பட்டு வந்திருக்க வேண்டு மென்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அகம்படியர் மரபினரும், சத்திரிய - பிராம்மண வர்ணக் கலப்பில் தோன்றிய உயர்குடி மருத்துவர்களுமே அங்க வைத்யர்களாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ’வெட்டுமாவலி அகம்படியர்’ சமூகத்தவர் தமது பூர்வபந்தங்களைத் தொடர்ந்து வந்ததால் ‘குடி படை'களாக நீடித்தனர். ஆனால், கேரள மாநிலத்தில் சாமந்தச் சிற்றரசர்களின் மரபைப் பின்பற்றி நம்பிதிருப்பாதம் (நம்பூதிரிபாத்) பிராம்மணர்களுடன் சம்பந்த உறவு கொண்டு முதன்மையான அதிகார வர்க்கமாக உருவெடுத்த அகம்படிய நாயர் சமூகத்தவர், தன்வந்திரியை மூலவராகக் கருதும் ஆயுர்வேத மருத்துவத் துறையின் ஒரு பிரிவாக வர்ம சிகிச்சை முறையை மாற்றினர்.

இப்படியான அகமுடையார்களுக்கு சம்பந்தப்பட்ட திருவோணத்திருநாளை வெறும் கேரள பண்டிகையாக மட்டும் சிறுமைப்படுத்தி வைத்திருப்பது வேறுயாருமல்ல, அகமுடையார் சமூகத்தினரும் தான் என்பதை இனியாவது புரிந்து கொள்வோம். வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

அனைவருக்கும் திருவோணத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நன்றி & ஆதார தரவுகள்: தமிழினி இதழ், திண்ணை, தமிழ் விக்கிபீடியா, கணக்கன் கூட்டத்தார் பட்டயம், கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்.