அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

6.5.14

மறைக்கப்பட்ட அகமுடையானின் வீர வரலாறு!


மே..5…1950

தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும் தோட்டங்களிலும் வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள்,மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.

பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் மலேயா கணபதி,வீரசேனன் ஆகியோருடன் இரணியனுக்கு தொடர்பு கிடைத்தது.நூல் வாசிப்புப் பழக்கம் உருவானது.பொதுவுடைமை மீதான பிடிப்பு அதிகமானது.இரகசிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புக்கிட்டியது. சிங்கப்பூரில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்துக் கொண்டதால் நாத்திக சிந்தனையாளன் “இரணியன்” பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்டார்.

1943ல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச்சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.”இரத்தம் தாருங்கள்;விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.

சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.1946ல் தொழிற்சங்கத்தின் முடிவுக்கு ஏற்ப தொழிலாளர்களின் நலனுக்காக போராட்டம் நடத்தினார்.மலேசிய முதலாளிகளும் ஆங்கிலேயர்களும் போராட்டத்தை ரவுடிகளைக் கொண்டு நசுக்க நினைத்ததை எதிர்கொள்ள “இளைஞர் தற்கொலைப் படை”ஒன்றை நிறுவினார். இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தார்.

1948ல் மலேசியா பொதுவுடைமைக் கட்சியைத் தடை செய்தது. பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள் தலைமறைவானார்கள்.தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாக்குடிக்குத் திரும்பினார்.1947ல் விடுதலையடைந்த இந்தியாவில் நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும் பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும் நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு இதற்காகவா இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.

இந்தியாவிலும் பொதுவுடைமைக்கட்சி தடைசெய்யப்பட்டிருந்த நேரம்.அவரது ஊரான வாட்டாக்குடியில் நிலப்பிரபுக்களின் கொடுமை விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரித்திருந்தது. ”சாணிப்பாலும் சவுக்கடி”யும் விவசாயத்தொழிலாளர்களுக்கு இயல்பான தண்டனையாக இருந்தது.ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார்.

நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.மீண்டும் தலைமறைவு வாழ்க்கை தொடர்கதையானது.நிலப்பிரபுக்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களும் காவல்துறையினர் உதவியுடன் இரணியனுடன் தொடர்புடையவர்களைக் கொலை செய்யத் தொடங்கினர்.

1950 மே மாதம் 3 ஆம் நாள் இரணியனுடன் இணைந்து செயல்பட்ட சாம்பனோடை சிவராமனை காவல்துறை சுட்டுக்கொன்றது. வடசேரிக் காட்டில் மறைந்திருந்த இரணியனை காவல்துறை நெருங்கியது.காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் ஓடமுடியவில்லை.இரணியனையும் அவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரையும் வடசேரி சம்பந்தம் என்பவர் காவல்துறைக்குக் காட்டிக்கொடுத்தார்.

1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல்துறையினர் பிடித்தனர்.ஆறுமுகத்தின் மீது வழக்கு ஏதுமில்லை என்பதால் அவரை விடுவித்து தப்பிக்க காவல்துறையினர் சொன்ன போதும் இரணியனை விட்டுச் செல்ல மறுத்துவிட்ட ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை சுட்டுக்கொன்றது.

வாட்டாக்குடி இரணியன்,ஆம்லாப்பட்டு ஆறுமுகம்,சாம்பனோடை சிவராமன் ஆகியோரின் உடல்கள் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு கூராய்வு செய்யப்பட்டன.பின்னர் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. தனது 30 வது வயதில் விவசாயிகளின்… தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று… மே 5…

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு உயிர்நீத்த வாட்டுக்குடி இரணியன்,சாம்பவனோடை சிவராமன் ஆகிய இருவரும் “அகமுடையார்”சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இருந்து உயிர் நீத்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ச்சாதியான இவர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு வருங்கால இளைஞர்களுக்கு சமர்ப்பணம்!

நன்றி: திரு. அரப்பா தமிழன்

5.5.14

டெல்டா தேவரின போராளிகள்!


1943ல் தேசத்தந்தை நேதாஜியை சிங்கப்பூரில் சந்தித்து இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, பின்னர் பயிற்சியாளராக உயர்ந்தவர். மலேசியாவில் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிராக "இளைஞர் தற்கொலைப் படை” ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கொரில்லா பயிற்சியும் துப்பாக்கிச்சுடும் பயிற்சியும் கொடுத்தவர். எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணான டெல்டா மாவட்டங்களில் சுதந்திரத்திற்கு பின்னாலும் வேறூருன்றிருந்த தலித் விரோத ஆதிக்க போக்கை அன்றைக்கே எதிர்த்து கம்யூனிசத்தை வளர்த்தெடுத்தவர்.
 

அந்த மாவீரன் யார் தெரியுமா?

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர் - தையல் அம்மாளுக்கு, 1920 நவம்பர் 15 அன்று வெங்கடாச்சலம் என்ற இயற்பெயரோடு பிறந்த மாவீரன் வாட்டாக்குடி இரணியன், தனது 30வது வயதிலேயே விவசாயிகளின், தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்டதன் விளைவாக காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று. (05.05.1950)

டெல்டா பகுதியில் ஜமீன்தாரி/பண்ணை ஒழிப்பை கொண்டுவந்து அப்பாவி தலித் மக்களை காத்ததால், வாட்டாக்குடி இரணியன் மட்டுமல்ல; ஜாம்பனோடை சிவராமனையும் சேர்த்து இருபெரும் பொதுவுடைமை போராளிகளை ஒரேநாளில் காவல்துறையால் கொல்லப்பட்ட தினம் இன்று மே 5 1950. இம்மாவீரர்கள் சாதியால் (அகமுடையார் - தேவர்) ஆதிக்கவாதிகள்; ஆனால், செயலால் பொதுவுடைமை வாதிகள்!

மாவீரர்களுக்கு வீரவணக்கம்!