அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

24.10.13

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?



உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!

எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

1 comment:

  1. நல்லதொரு வரலாற்றுப் பதிவு.
    “காளையார்கோயில் தகர்க்கப்படும்“ என்ற ஒருசொல்லுக்கே அடிபணிந்த மாவீரர்கள்.
    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete